ஆரணியில் ஆபாசமாக பேசியதாக கூறி சீட்டு நிறுவனத்தை ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.பிரமுகர் முற்றுகை

ஆரணியில் ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசியதாக கூறி சீட்டு நிறுவனத்துக்குள் அ.தி.மு.க.பிரமுகர் ஆதரவாளர்களுடன் சென்று முற்றுகையிட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஊழியரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-11 17:18 GMT

ஆரணி

ஆரணியில் ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசியதாக கூறி சீட்டு நிறுவனத்துக்குள் அ.தி.மு.க.பிரமுகர் ஆதரவாளர்களுடன் சென்று முற்றுகையிட்டார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஊழியரும் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிதி நிறுவனம்

ஆரணி காந்தி ரோட்டில் பாரத் கியாஸ் அருகாமையில் தனியார் சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த சீட்டு நிறுவனம் ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தில் அ.தி.மு.க.பிரமுகர் ஒருவர் சீட்டு சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சீட்டு தொகை சந்தாவுக்கான காசோலையை வீட்டில் கொடுத்து வந்துள்ளதாக சீட்டு நிறுவனத்துக்கு அ.தி.மு.க.பிரமுகர் செல்போனில் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில் நேற்று பகலில் ஊழியர்கள் ராஜா, பிரசாந்த் ஆகியோர் வசூல் செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் இருந்த அ.தி.மு.க.பிரமுகரின் மனைவி அவர்களிடம் வெளியே இருங்கள், வருகிறேன் என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.

மழுப்பலான பதில்

ஆனால் அவர் வருவதற்குள் 2 பேரும் உள்ளே நுழைந்து அறைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்பொழுது அ.தி.மு.க.பிரமுகரின் மனைவி ஏன் உள்ளே வந்தீர்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு இருவரும் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு காசோலையை பெற்று சென்று விட்டனர்.

இது சம்பந்தமாக அந்த பெண் நடந்தவற்றை தனது கணவரிடம் போனில் கூறியுள்ளார். அதன் பேரில் அவர் சம்பந்தப்பட்ட வசூலாளரிடம் கேட்காமல் அவரது மேலாளரான வேலூரில் உள்ள அந்த சீட்டு நிறுவனத்தின் நிர்வாகி சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆபாசமாக...

அவர் அ.தி.மு.க.பிரமுகரை ஒருமையிலும் ஆபாசமாகவும் பேசி போனை துண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.பிரமுகர் நேற்று அவரது ஆதரவாகளுடன் தனியார் சீட்டு நிறுவனத்தில் நுழைந்து அங்கு பணிபுரிந்தவர்களிடம் சம்பந்தப்பட்ட வசூலாளர்கள் எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் பதில் அளிக்கவில்லை.

அதன் பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வேலூர் அலுவலகத்தில் இருந்து நிர்வாகி சரவணன் வந்தார். அவர் போலீசார் முன்னிலையில் தாக்கப்பட்டார். அவரை உடனடியாக போலீசார் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு ஆவின் தலைவர் பாரி பி.பாபு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டு அ.தி.மு.க.பிரமுகரை வெளியே அழைத்துச் சென்றனர். அதன் பிறகு தனியார் சீட்டு நிறுவனத்தை பூட்டி விட்டனர்.

இது சம்பந்தமாக ஆரணி நகர போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்