வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்கும் -எடப்பாடி பழனிசாமி பேச்சு
சிறு வணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் எந்த ரூபத்தில் நுழைய முயன்றாலும் வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. விளங்கும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
சென்னை,
தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை சார்பில் 40-வது வணிகர் தின விழா, 'சுதேசி விழிப்புணர்வு மாநாடு' என்ற பெயரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள வி.ஜி.பி. தங்க கடற்கரையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை தலைவர் அ.முத்துகுமார் தலைமை தாங்கினார்.
இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சமுத்து, தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஷேக்தாவூத், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா உள்ளிட்டோர் மாநாட்டு உரையாற்றினர்.
பாதுகாப்பு அரணாக...
மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
சிறு வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் கால்பதிப்பதை அ.தி.மு.க. அரசு கடுமையாக எதிர்த்தபோது, எதிர்த்து குரல் கொடுத்த சில வணிக அமைப்புகள் இப்போது, தி.மு.க. ஆட்சியில் வெளிநாட்டு நிறுவனங்கள் சிறுவணிகத்தில் நுழைந்துள்ள போதிலும் வாய் மூடி மவுனியாக இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
ஆனால், அன்னிய பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ரூபத்தில் தமிழகத்தில் சிறு வணிகத்தில் ஈடுபட முயன்றாலும் அ.தி.மு.க. வணிகர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, எஸ்.பி.சண்முகநாதன், டி.கே.எம்.சின்னையா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கே.பி.கந்தன், விருகை வி.என்.ரவி, த.மா.கா. மாநில வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், அய்யா வைகுண்டர் மக்கள் கட்சி தலைவர் முத்துரமேஷ் நாடார், நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன், தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, மாநில துணை பொதுச்செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன், மாநில அமைப்புத் தலைவர் எஸ்.வி.கணேசன், மாநில துணைத் தலைவர் ஜி.கணேசன், மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.