அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு
ஆண்டிப்பட்டியில் நடந்த அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது
அ.தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஆண்டிப்பட்டியில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர்கள் லோகிராஜன், வரதராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தான் ஒற்றை தலைமையை ஏற்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் கோஷம் எழுப்பினர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கட்சி, சின்னம் யார் வசமாகிறதோ அவர் வழியில் செல்வது என்று முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.