நகராட்சி அதிகாரிகளிடம் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம்

திறக்காத கடைக்கு வாடகை பாக்கி கேட்பதா? என்று நகராட்சி அதிகாரிகளிடம் அ.தி.மு.க.வினர் கடும் வாக்குவாதம் செய்தனா்.

Update: 2023-05-18 18:45 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த கடைகளுக்கான ஒதுக்கீட்டின்போது விழுப்புரம் வி.மருதூர்மேடு பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நகர செயலாளர் பசுபதியின் மனைவி பிரேமா என்பவர் மாடியில் உள்ள கடை எண் 23-ஐ எடுத்துள்ளார்.

மாடிக்கு செல்லும் வழியில் இருபுறமும் கீழே கடைகள் வைத்துள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் பிரேமா, அந்த கடையை திறக்கவில்லை. அதுபோல் அதே மாடியிலும், கடைக்கு செல்லும் வழிப்பாதையை ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனிடையே பிரேமாவுக்கு, 5 மாத கடை வாடகை பாக்கியை செலுத்துமாறு நகராட்சியில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க. நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கோதண்டராமன், வக்கீல் தமிழரசன், திருமலை, வினித் உள்ளிட்டோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட அதிகாரிகளிடம், திறக்காத கடைக்கு வாடகை பாக்கி கேட்பதா? என்று கூறியும், பலமுறை மனு கொடுத்தும் கடைக்கு செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏன் அகற்றவில்லை என்றும், தி.மு.க.வினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அகற்றவில்லையா என்றுகூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர், கடை திறக்காத காரணத்தினால் வாடகை கட்ட இயலாது என்றும், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக்கோரியும் அவர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற நகராட்சி ஆணையர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்