அ.தி.மு.க. பொதுக்கூட்டம்
பாளையங்கோட்டையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
அ.தி.மு.க. பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில், அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம், பாளையங்கோட்டை தெற்கு பஜார் லூர்துநாதன் சிலை அருகில் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை வடக்கு பகுதி செயலாளர் ஜெனி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு செயலாளரும், இளைஞர் பாசறை துணை செயலாளருமான என்.சின்னத்துரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ''வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். பின்னர் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. பெரும்பான்மையாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக பதவி ஏற்பார்'' என்றார்.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா பேசுகையில், ''அ.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் நலப்பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. தி.மு.க அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை நாம் விழித்திருந்து செயல்பட வேண்டும்'' என்றார்.
முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, பாளையங்கோட்டை பகுதி செயலாளர் முத்துகுட்டி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.