அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களைதான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது -எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களை தான் தி.மு.க. அரசு செயல்படுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,
தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க. முன்னாள் செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அந்த கட்சியில் இருந்து விலகி சேலத்தில் எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுச்செயலாளர் தேர்தல்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். 95 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளதை தெரிவித்துள்ளோம். இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு, பொதுச்செயலாளர் தேர்தலை தற்போது நடத்தக்கூடாது என்று கூறியுள்ளது. ஆனால் தடை விதிக்கவில்லை. நாங்களும் வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டங்களை தான் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பெரியதாக எந்த திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது.
நிம்மதியாக இல்லை
2021-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை. மின்கட்டணம், சொத்துவரி உயர்வால் அனைத்து தரப்பு மக்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பொதுமக்கள் நிம்மதியாக இல்லை. துன்பமும், வேதனையையும் அனுபவித்து வருகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான முதல் கையெழுத்து போடுவோம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தெரிவித்தார்கள். ஆனால் நீட் தேர்வு ரத்து செய்தார்களா? அதற்காக அவர்கள் எந்த போராட்டமும் நடத்தவில்லை. நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா? ஆனால் காவிரி பிரச்சினையில் தமிழக உரிமைக்காக அ.தி.மு.க. சார்பில் குரல் கொடுத்து 22 நாட்கள் நாடாளுமன்ற அவையை முடக்க செய்தோம். ஆனால் நீட் தேர்வுக்கு தி.மு.க.வினர் எந்த குரலும் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.