பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2023-04-01 14:28 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை கடந்த 28-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

மேலும், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அறிவித்த ஐகோர்ட்டு பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும் அனுமதி அளித்தது.

தீர்ப்பு வெளியான உடன் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அதில், எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, அதிமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெறும் என்றும் அதற்கான சேர்க்கை படிவங்கள் வரும் 5-ம் தேதி முதல் வங்கப்படும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 7-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்