விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-20 22:05 GMT

தாம்பரம்,

காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதை கண்டித்தும், இவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் செங்கல்பட்டு மேற்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சென்னையை அடுத்த தாம்பரம் சண்முகம் சாலையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சிட்லபாக்கம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தாம்பரம் பகுதி செயலாளர்கள் எல்லார் செழியன், எம்.கூத்தன், ஏ.கோபிநாதன் ஆகியோர் வரவேற்றனர்.

இதில் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ப.தன்சிங், கணிதா சம்பத், ம.தனபால், மாவட்ட நிர்வாகிகள் புருஷோத்தமன், தில்லை ராஜ், பகுதி செயலாளர்கள் சிட்லபாக்கம் மோகன், குரோம்பேட்டை சதீஷ், பல்லாவரம் ஜெய்பிரகாஷ், பம்மல் அப்பு என்ற வெங்கடேசன், மாவட்ட பொருளாளர் பரசுராமன் உள்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம்

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், ரமணா மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

இதில் காய்கறிகளின் விலை அந்தரத்தில் பறப்பது போல் உணர்த்துவதற்காக தனியாக மேடை அமைத்து அதில் தக்காளி, கோஸ் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை தொங்க விட்டும் தக்காளி, கத்தரிகாய் உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிந்து கொண்டும் கோஷமிட்டனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காவலான் கேட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மதனந்தபுரம் கே.பழனி, அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பாலாஜி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பொருளாளர் வக்கீல் வீ.வள்ளிநாயகம், மாவட்ட பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்