தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் ஊழலை கண்டித்து அ.தி.மு.க. விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தும்-எடப்பாடி பழனிசாமி பேட்டி

தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சிகளில் ஊழலை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-08-28 21:05 GMT

ஓமலூர்:

எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் ஓமலூரில் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்த மாவட்டம் என்ற பெருமையை சேலம் மாவட்டம் பெற்றுள்ளது. பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்ட பணிகளில் ஊழல் நடந்துள்ளது. இதை கண்டித்து அந்தந்த பேரூராட்சி, நகராட்சிகளில் அ.தி.மு.க. சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

மதுரை மாநாட்டின் வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஓ.பன்னீர்செல்வம் விரக்தியில் பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிறது. 49 ஆண்டு காலம் நான் அ.தி.மு.க.வில் உள்ளேன். 52 ஆண்டுகால அனுபவமிக்க நிர்வாகிகளை கொண்டு மாநாட்டை நடத்தி முடித்தோம்.

தேர்தல் பணி

மத்திய அரசு தணிக்கை குழு ரூ.7½ லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறியுள்ளது என்று தி.மு.க. குற்றம் சாட்டுகிறது. இது ஊழல் அல்ல. குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர். தண்ணீர் திறந்து விட்டால் மட்டும் போதாது, சாகுபடி காலம் முழுமைக்கும் தண்ணீர் வழங்க வேண்டும். பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். அதாவது பூத் கமிட்டி, பாசறை, மகளிர் அணி போன்ற முதல் கட்ட பணிகளை செய்து வருகிறோம். கனகராஜ் என்றைக்காவது ஜெயலலிதாவின் காரை ஓட்டி உள்ளாரா? பொதுக்கூட்டம், விழாவுக்கு செல்லும் போது யாராவது பார்த்து இருக்கின்றீர்களா? எனவே புகழேந்தி பேசுவது எல்லாம் தி.மு.க.வுக்கு ஜால்ரா அடிக்கும் வேலைதான்.

மக்களை ஏமாற்றும் தி.மு.க.

மதுரை மாநாட்டை கட்டுக்கோப்புடன் நடத்தி முடித்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்குவதாக கூறுகின்றீர்கள். அவர் முதலில் கட்சி தொடங்கட்டும், அதன்பிறகு பார்த்து கொள்ளலாம். விலைவாசி உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். ஆனால் தி.மு.க. அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை மாநாட்டில் போலீசார் எங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை.

சேலத்தில் நடத்த போவதாக கூறும் தி.மு.க. இளைஞர் அணி மாநாட்டுக்கு போலீசார் எப்படி பாதுகாப்பு அளிக்கின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நீட் தேர்வுக்கு ஆரம்ப புள்ளி போட்டது அவர்கள் கூட்டணி ஆட்சி காலத்தில்தான். அதை எதிர்த்து அ.தி.மு.க. சட்ட போராட்டம் நடத்தியது. இன்று மக்களை ஏமாற்ற மாற்றி மாற்றி பேசுகின்றனர். நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. வும், காங்கிரசும் மக்களை ஏமாற்றுகிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, சந்திரசேகரன் எம்.பி., மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ.க்கள் மணி, ராஜமுத்து, ஜெய்சங்கர், நல்லதம்பி, சித்ரா, சுந்தர்ராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்