வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-31 16:44 GMT

வேலூர் மாநகராட்சி அவசர கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவசர கூட்டம்

வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் நடந்தது. மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். துணைமேயர் சுனில்குமார், கமிஷனர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கிராமங்களை போன்று மாநகர பகுதியில் பகுதி சபா அமைக்க உத்தரவிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வார்டு குழு மற்றும் 419 பகுதி சபா அமைப்பது, வார்டுகுழுவிற்கு அந்த வார்டின் கவுன்சிலர் தலைவராகவும், அந்த பகுதியில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவரை பகுதி சபாவின் உறுப்பினராக நியமனம் செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்தார். இதையடுத்து அவசர கூட்டம் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டது.

கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அதைத்தொடர்ந்து மேயர், துணைமேயர் மற்றும் கமிஷனர் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். அப்போது அ.தி.மு.க கவுன்சிலர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க. கவுன்சிலர்களான சரவணன், ரமேஷ், அருணா, எழிலரசன், அஸ்மிதா, அமலரூபா, ராஜேஸ்வரி மற்றும் பா.ஜ.க. கவுன்சிலர் சுமதிமனோகரன் ஆகியோர் கூட்ட அரங்கில் அமர்ந்து தீர்மானம் குறித்து விளக்கம் அளிக்கக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூட்டம் நிறைவடைந்து விட்டதால் அனைவரும் வெளியேறும்படி மாநகராட்சி ஊழியர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் தீர்மானம் குறித்து விளக்கம் அளிக்கும்வரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் கூட்ட அரங்கில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் கவுன்சிலர்கள் செல்போன் வெளிச்சத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துணைமேயர் பேச்சுவார்த்தை

போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களிடம் துணைமேயர் சுனில்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். மேயர் சுஜாதா அவசர வேலையாக சென்று விட்டார். கமிஷனரை சந்தித்து விளக்கம் கேட்டு கொள்ளுங்கள் என்றார். அதற்கு கவுன்சிலர்கள், எங்களுக்கு மேயர்தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

அவர்களிடம் தொடர்ந்து பேசிய துணைமேயர், உங்கள் கோரிக்கை தொடர்பாக கமிஷனரின் அறையில் சென்று விளக்கம் கேளுங்கள். உங்களின் உரிமைகள் எதுவும் பாதிக்கப்படாது என்று சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் அங்கிருந்து கமிஷனர் அறைக்கு சென்றனர். இந்த சம்பவத்தால் மாநகராட்சி கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

5 நிமிடங்களில் முடிந்த கூட்டம்

வேலூர் மாநகராட்சி அவசர கூட்டம் மதியம் 12.15 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட 2 தீர்மானங்களை வாசித்து, அவை நிறைவேற்றப்படுவதாக மேயர் சுஜாதா தெரிவித்தார். தீர்மானம் தொடர்பாக பேச அனுமதிக்கும்படி கவுன்சிலர்கள் சிலர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சுமார் 5 நிமிடங்களில் அவசர கூட்டம் நிறைவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்