விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
விலைவாசி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. போராட்டம் நடத்தினர்.
சென்னை
காய்கறி, மளிகை பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், எனவே இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அ.தி.மு.க. ஒருங்கிணைந்த சென்னை மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, விருகை ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன் உள்பட மாவட்ட செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெ.ஜெயவர்தன் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில், கழக தேர்தல் பிரிவு செயலாளரும், மாநகர் மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் தலைமையில் விலைவாசி உயர்வைக் கண்டித்து குமரன் நினைவகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மற்றும் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.