அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை; ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேட்டி

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2023-04-09 20:52 GMT

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

டெல்டா மாவட்டங்கள்

அ.தி.மு.க. ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு படிவத்தை வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு ஆகிய தொகுதிகளில் 2 கட்டங்களாக மொத்தம் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை என்பது வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் நிகழ்ச்சியாக அமையும். இது ஒரு திருப்புமுனையாக அமையும். அதன்பிறகு 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து யாராலும் அசைக்க முடியாது என்ற வரலாறு படைக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்தபோதே டெல்டா மாவட்டங்கள் வேளாண்மை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அங்கு எந்த தொழிற்சாலையும் உருவாக்கக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு கூட்டமே நடத்தப்பட்டது.

முரண்பாடு இல்லை

பிளஸ்-2 பொதுத்தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை என்ற கருத்தை சட்டமன்றத்தில் தெரிவித்தோம். தமிழக வரலாற்றில் இவ்வளவு மாணவர்கள் தேர்வு எழுதாமல் இருந்ததில்லை. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விலும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வராதது தொடர்பாக சட்டமன்ற கூட்டம் நடக்கும்போது குரல் எழுப்பப்படும்.

அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி இடையே எந்த முரண்பாடும் இல்லை. காலம், நேரத்துக்கு ஏற்ப பிரதமர் நரேந்திரமோடியை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார். எங்களை பொறுத்தவரையில் கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. தலைமை தெளிவான முடிவில் உள்ளது. அதேபோல் பா.ஜ.க. தலைமையும் சரியாக இருக்கிறது. எனவே அதைப்பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு நான் பதில் தர முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்