அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர் மீது மேலும் 20 பேர் புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆத்மா சிவகுமார் மீது மேலும் 20 பேர் புகார் அளித்தனர்.

Update: 2022-11-14 18:45 GMT

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஆத்மா சிவகுமார் மீது மேலும் 20 பேர் புகார் அளித்தனர்.

அரசு வேலைக்கு பணம்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் என்கிற ஆத்மா சிவக்குமார் (வயது 53).

அ.தி.மு.க. முன்னாள் பிரமுகர்.

இவர் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி கோவை, திருப்பூர், நீலகிரியை சேர்ந்த பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் 68 பேரிடம் ரூ.2 கோடியே 17 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் 20 பேர் புகார்

இந்த நிலையில் ஈரோடு, நீலகிரியை சேர்ந்த 20 பேர் நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆத்மா சிவக்குமார் மீது பண மோசடி குறித்த புகார் அளிக்க வந்தனர். அப்போது, அங்கிருந்த அதிகாரிகள், இதுகுறித்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கும்படி கூறினர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் கோவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்துக்கு வந்து அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவையை சேர்ந்த ஆத்மா சிவக்குமார் என்பவர் எங்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் வரை செலவாகும் என்றும் கூறினார். அதை நம்பி கோவை, ஈரோடு, நீலகிரியை சேர்ந்த பலர் அவரிடம் அரசு வேலைக்காக பணம் கொடுத்தனர்.

பணத்தை மீட்க வேண்டும்

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அரசு வேலை வாங்கித்தராமல் பண மோசடி செய்து விட்டார்.

மேலும் மோசடி செய்த பணத்தை வைத்து கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் சொத்துகள் வாங்கி உள்ளார்.

தற்போது போலீசார் இந்த சொத்து விபரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதன்காரணமாக அவரது உறவினர்கள் அந்த சொத்துகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே வழக்கு முடியும் வரை இந்த சொத்துகளை முடக்கி வைக்க வேண்டும்.

ஆத்மா சிவக்குமார் மீது தூத்துக்குடி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

எனவே அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மோசடி செய்யப்பட்ட எங்கள் பணத்தை திரும்ப மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்