விஜயதசமியை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை
கலசபாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் விஜயதசமியை முன்னிட்டு அங்கன்வாடி மையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது.
கலசபாக்கம்
கலசபாக்கம் மற்றும் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் செயல்படும் 223 அங்கன்வாடி மையங்களில் விஜயதசமியை முன்னிட்டு மாணவர்கள் சேர்க்கை நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த வாரம் முதல் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் செயல்படுத்தப்படும் முன்பருவக் கல்வி குறித்து விரிவாக பெற்றோர்களிடம் எடுத்துரைத்து 2 வயது முதல் 5 வயது உள்ள குழந்தைகளுக்கு முன் பருவக்கல்வி சேர்க்கைக்காக விஜயதசமி அன்று குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அழைத்து வருமாறு தெரிவித்தனர்.
அதன்படி நேற்று கலசபாக்கம் மற்றும் துரிஞ்சாபுரம் வட்டாரங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக்கல்வி மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.
கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் முன் பருவக்கல்வி சேர்க்கையை வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நெ.சரண்யா தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்கள் சேர்க்கை சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, குழந்தைகளுக்கு பச்சரிசியில் 'அ' எழுதி வைத்தனர்.