68 பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 68 பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-03 18:45 GMT


தமிழ்நாடு அரசால் கடலூர் மாவட்டத்தில் 32 பிற்படுத்தப்பட்டோர் (பள்ளி மாணவர் -18, பள்ளி மாணவிகள்-9, கல்லூரி மாணவர்-3, கல்லூரி மாணவிகள்-2) விடுதிகளும், 35 மிக பிற்படுத்தப்பட்டோர் (பள்ளி மாணவர் -22, பள்ளி மாணவிகள்-11, கல்லூரி மாணவர்-2, கல்லூரி மாணவிகள்-3) விடுதிகளும், 1 சிறுபான்மையினர் மாணவிகள் நல விடுதியும் ஆக மொத்தம் 68 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலுகிற மாணவ- மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகள் சேர தகுதியுடையவர்கள் ஆவர். விடுதிகளில் பின்வரும் சலுகைகள் எவ்வித செலவினமும் இல்லாமல் இலவசமாக வழங்கப்படுகின்றன.

உணவு

அதாவது, அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கு உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும்.

விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக, பெற்றோர் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு இருப்பிடத்தில் இருந்து அவர்கள் பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு பொருந்தாது.

சமர்ப்பிக்க வேண்டும்

தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடம் இருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வருகிற 15-ந்தேதிக்குள்ளும், கல்லூரி விடுதிகளுக்கு அதேபோல், அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

சான்றிதழ்கள்

மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்க தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே மாணவ-மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று, பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்