வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; நாளை தொடங்குகிறது
வீரபாண்டி அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை தொடங்குகிறது.
தேனி அருகே வீரபாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வந்தது. இதையொட்டி ஏராளமான மாணவ-மாணவிகள் கல்லூரியில் சேர விண்ணப்பித்து இருந்தனர்.
இந்தநிலையில் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அதன்படி, நாளை முதல் வருகிற 31-ந்தேதி வரை அனைத்து பாடப்பிரிவுக்கும் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு 1-ந்தேதி பி.எஸ்சி. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான பொது கலந்தாய்வு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ந்தேதி பி.காம்., பி.ஏ. பொருளாதாரம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், 3-ந்தேதி பி.ஏ. தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
எனவே கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் தங்களது புகைப்படம், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.
இந்த தகவலை கல்லூரி முதல்வர் உமாதேவி தெரிவித்துள்ளார்.