ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2,178 கோடிக்கு நிர்வாக அனுமதி
ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.2,178 கோடிக்கு நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் 27.8.2021 அன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 10 ஆயிரம் கி.மீ. நீள சாலைகள் தெரிவு செய்யப்பட்டு, மாவட்ட இதர சாலைகளாக படிப்படியாக தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக 2 ஆயிரம் கி.மீ. நீளச் சாலைகள் தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
நிர்வாக ஒப்புதல்
இந்த அறிவிப்பு குறித்து அரசுக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமை என்ஜினீயர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) கடிதம் எழுதி, 2 ஆயிரம் கி.மீ. நீளமுள்ள 873 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை ரூ.2,178 கோடி செலவில் மாவட்ட இதர சாலைகளாக தரம் உயர்த்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வேண்டும் என்று கடிதம் எழுதினார்.அவரது கருத்துருவை ஏற்று, அதற்கான நிர்வாக அனுமதியை அளித்து அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.