மேலவளவு கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மேலவளவு ஊராட்சித்தலைவர் உள்ளிட்டவர்கள் கொலை வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலையானதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-01-25 20:35 GMT


மேலவளவு ஊராட்சித்தலைவர் உள்ளிட்டவர்கள் கொலை வழக்கு கைதிகளை முன்கூட்டியே விடுதலையானதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

7 பேர் படுகொலை

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு ஊராட்சி தலைவராக இருந்த முருகேசன் உள்பட 7 பேர் 1997-ம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 17 பேரில் 5 ஆண்டு சிறைவாசம் அனுபவித்த 60 வயதை கடந்த 3 பேரை அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. ஒருவர் இறந்துவிட்டார்.

இதனால் இந்த வழக்கில் ஆயுள்தண்டனை பெற்ற ராமர், சின்ன ஒடுங்கன், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி ஆகிய 13 பேர் மட்டும் மதுரை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர். இந்த 13 பேரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி கடந்த 2019-ம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்டனர்.

மேல்முறையீடு

இவர்களை விடுதலை செய்த உத்தரவை எதிர்த்து மூத்த வக்கீல் ரத்தினம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதேபோல அவர்களை விடுதலை செய்ததற்கு எதிராக, கொலையானவர்களின் உறவினர்கள் தரப்பிலும் தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, 13 பேரின் விடுதலை தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

மேலும் விடுதலையான 13 பேரையும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து சேர்த்தது.

இதுதொடர்பாக அவர்களும், தமிழக அரசும் பதில் அளிக்கவும், இவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தும்படியும் உத்தரவிட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இந்தநிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பு மற்றும் மனுதாரர்கள் தரப்பில் பல்வேறு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்