அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்படும் ஆதிவாசி மக்கள்

கரியசோலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

Update: 2023-10-03 20:45 GMT

கரியசோலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் ஆதிவாசி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

பழுதடைந்த வீடுகள்

பந்தலூர் தாலுகாவில் கரியசோலை ஆதிவாசி கிராமம் உள்ளது. இங்கு 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு குடிநீர், சாலை மற்றும் வீடு உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பழுதடைந்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு 15 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ளவர்களுக்கு இதுவரை வீடுகள் கட்டப்பட வில்லை. இதனால் பழுதடைந்த வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் மழைக்காலத்தில் வீடுகளுக்குள் தண்ணீர் கசிகிறது. இதையடுத்து ஆதிவாசி மக்களின் கோரிக்கைக்கு பிறகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 12 வீடுகள் கட்டப்பட்டது.

அடிப்படை வசதிகள்

ஆனால், இதுவரை மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வில்லை. இதனால் புதியதாக கட்டியும் ஆதிவாசி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது. மேலும் வீடுகள் இல்லாமல் உள்ள பல குடும்பங்களுக்கு இதுவரை வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்காததால், ஒரே வீட்டுக்குள் 2 குடும்பத்தினர் தங்கும் நிலை தொடர்கிறது.

இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீடுகள் கட்டப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 12 வீடுகளும் இதுவரை மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் திறக்க வில்லை. மேலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அனைத்து வீடுகளும் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பெயர்ந்து விழும் சுவர்களை நாங்களே சீரமைத்து பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்