சேரம்பாடி அருகே ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பலி- மீன் பிடித்த போது பரிதாபம்
சேரம்பாடி அருகே மீன் பிடித்த போது ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பரிதாபமாக இறந்தார்.
பந்தலூர்
சேரம்பாடி அருகே மீன் பிடித்த போது ஆற்றில் மூழ்கி ஆதிவாசி பரிதாபமாக இறந்தார்.
மீன்பிடிக்க சென்றார்
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே உள்ள கருக்கபுறா ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 25). ஆதிவாசியான இவர் மீன் பிடித்து பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று வழக்கம் போல் மீன்பிடிப்பதற்காக சேரம்பாடி அருகே உள்ள சோலாடி ஆற்றுக்கு சென்றார். பின்னர் ஆற்றின் கரையில் இருந்தபடி மீன்பிடித்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியபடி காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என அபயக்குரல் எழுப்பினார்.
அப்போது அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததால் யாரும் வரவில்லை. இதனால் ராஜேஸ் ஆற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். நெடுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த ராஜேசின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.
பிணமாக மீட்பு
அப்போது ஆற்றின் கரையில் ராஜேசின் காலணி மட்டும் கிடந்தது. இதனால் அவர் ஆற்றில் மூழ்கியிருக்கலாமோ என்ற சந்தேகத்தில் உறவினர்கள் மற்றும் வாலிபர்கள் சிலர் ஆற்றில் குதித்து ராஜேசை தேடினார்கள். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து உடனடியாக இதுபற்றி மேப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் இறங்கி ராஜேசை தேடினார்கள். சிறிது நேர தேடலுக்கு பின்னர் ராஜேஸ் பிணமாக மீட்கப்பட்டார்.
உறவினர்கள் கதறல்
அப்போது ராேஜசின் உறவினர்கள் அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சுல்தான்பத்தேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்பிடிக்க சென்ற போது ஆற்றில் மூழ்கி ஆதிவாசி இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.