பூமி, நிலவை படம் எடுத்து அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் -விஞ்ஞானிகள் தகவல்

லேண்டர், ரோவருக்கு போட்டியாக சூரியனை ஆய்வு செய்ய விண்ணிற்கு ஏவப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலமும் பூமி மற்றும் நிலவை படம் எடுத்து அனுப்பி உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

Update: 2023-09-07 18:48 GMT

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது. இதில் அனுப்பப்பட்ட லேண்டர் நிலவில் தரையிறங்கி அதில் இருந்து வெளியே வந்த ரோவர் பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டது. அத்துடன் நிலவின் மேற்பரப்பை லேண்டரும், ரோவரும் பல்வேறு கோணங்களில் புகைப்படங்களை எடுத்து, பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டுக்கு ஆர்பிட்டர் உதவியுடன் அனுப்பியது.

இதனைத்தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் தன்னுடைய இலக்கை நோக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் அது தன் இலக்கை அடைய இருக்கிறது. இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது.

பூமி - நிலவு

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறும்போது, 'சூரியனை ஆய்வு செய்யும் முதல் விண்வெளி அடிப்படையிலான இந்திய பணியான ஆதித்யா எல்-1, பூமி மற்றும் சூரியனின் முதல் புகைப்படங்களை எடுத்து அனுப்பி உள்ளது. இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஆதித்யா எல்-1 பூமி மற்றும் நிலவையும் சேர்த்து 'செல்பி' படம் எடுத்து உள்ளது. இந்த படம் பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டு தற்போது அந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஆதித்யா எல்-1 விண்கலம் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எல்-1 சுற்றுப்பாதையில் இருந்தபடி சூரியனை ஆராய இருக்கிறது.

இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்