ஆடிப்பெருக்கு திருவிழா: தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில் ஆடிப்பெருக்கு திருவிழாவையொட்டி தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-08-04 18:07 GMT

மகாலட்சுமி அம்மன் கோவில்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மேட்டுமகாதானபுரத்தில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது.

இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது விடிய, விடிய அம்மன் திருவீதி உலா வந்து நேற்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கோவில் முன்புறம் உள்ள கொடிமரத்தில் விளக்கேற்றப்பட்டது.

தலையில் தேங்காய் உடைப்பு

தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஆடி மாதத்தில் 18 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கோவில் முன்பு வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது பூசாரி பெரியசாமிக்கு அருள்வந்து சக்தி காய் எனப்படும் 7 தேங்காய்களை கோவில் முக்கியஸ்தர்களின் தலையில் உடைத்தார். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு வரிசையாக அமர்ந்து இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. அப்போது தேங்காய் உடைந்து சிதறின. இதில் மொத்தம் 519 பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டன.

போலீசார் பாதுகாப்பு

அப்போது பக்தர்களின் தலையில் உடைக்கப்பட்ட தேங்காயை பிரசாதமாக பக்தர்கள் எடுத்து சென்றனர். இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிகழ்ச்சியையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்