ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் ஐ.ஐ.டி.யில் படிக்கலாம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தாட்கோ மூலம் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.யில் படிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-04 17:25 GMT

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய பட்டப்படிப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ நிறுவனம் இணைந்து தொழில் பாதை திட்டத்தை செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. உலகிேலயே முதல் முறையாக இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டத்தை தொடங்கி உள்ளது. இதில் பிளஸ்-2, டிப்ளமோ படிப்பு முடித்த மாணவர்கள் 4 ஆண்டு பட்டப்படிப்பு படிக்கலாம்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வருகிற 8-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி. மூலம் நடத்தப்படும் நுழைவு தேர்வில் பங்கு பெற தேவையில்லை.

இணையதளம் வழியாக

அதற்கு பதிலாக பிளஸ்-2 அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவகளுக்கு ஐ.ஐ.டி. மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. மேலும் இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல், வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் ஒரு அடிப்படை சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள் அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தின் வகுப்புகள் இணையதளம் வழியாக நடத்தப்படும். மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை படித்துக்கொண்டே ஐ.ஐ.டி. வழங்கும் பட்டப் படிப்பினை படிக்கலாம்.

60 சதவீதத்துக்கு மேல்...

தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் பிளஸ்-2 மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீததுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீததுக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் ஐ.ஐ.டி. நடத்தும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு தாட்கோ மூலம் கல்வி கடன் வழங்கப்படும்.

தகுதியுள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர்

மாணவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையத்தளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்