ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும்

ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என நலக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

Update: 2022-12-26 18:15 GMT

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்கண் குழு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், அரக்கோணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் சரியாக இல்லை எனவும், கழிப்பறைகள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாகவும், பள்ளிக்கு வரும் வழியில் மாணவிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இளைஞர்கள் நடமாட்டம் இருப்பதால் இவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குழு உறுப்பினர் தெரிவித்தார்.

அதேபோன்று குருவராஜப்பேட்டையில் உள்ள ஆதிதிராவிடர் நல தங்கும் விடுதி கட்டிடமும் மோசமாக உள்ளது. அதை சீரமைக்க வேண்டும். காரை ஆதிதிராவிடர் நல பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களுக்கு கல்வி தரம் பாதிக்கின்றது. எனவே ஆசிரியர்களை நிரப்பிட பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிட நல பள்ளி விடுதிகள், பள்ளிகளில் கட்டிடங்கள் மற்றும் சமையல் அறைகள், உணவின் தரம் மற்றும்அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து அனைத்தும் முறையாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கூட்டத்தின்போது சோளிங்கர், ஆற்காடு நகராட்சிகள் மற்றும் விளாப்பாக்கம் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 150 நபர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளை தாட்கோ துறை மூலம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.லோகநாயகி, உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ்கிரிஷ் அசோக், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார் மற்றும் விழிக்கண் குழுஉறுப்பினர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்