இடிந்து விழும் நிலையில் ஆதிதிராவிடர் காலனி வீடுகள்

கறம்பக்குடி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள ஆதிதிராவிடர் காலனி வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-05-29 17:52 GMT

ஆதிதிராவிடர் காலனி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட களபம் கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புகள் உள்ளது. இதில் 40 குடும்பத்தினருக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த வீடுகளில் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த தொகுப்பு வீடு குடியிருக்க முடியாத அளவிற்கு சிதிலமடைந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக் கூடிய நிலையில் மேற்கூரை பெயர்ந்தும் சுற்றுப்புற சுவர்கள் பிளவுபட்டும் உள்ளது. இதனால் வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு எந்த நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடக்குமோ என்ற அச்சத்துடன் தங்களது பொழுதைக் கழித்து வருகின்றனர்.

கோரிக்கை

மேலும் சேதமடைந்த வீடுகளின் மேற்கூரை பூச்சுகள் அவ்வப்போது கீழே விழுந்து பலர் தொடர்ந்து காயம் அடைந்தும் வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஒரு வீட்டின் மேற்புற சிமெண்டு பூச்சுகள் இடிந்து விழுந்தன.

அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்தவர்கள் காயமின்றி உயிர் தப்பினார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்கவோ அல்லது இடித்துவிட்டு புதிதாக கட்டித் தரவோ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி ெபாதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

புதிய வீடுகள் கட்டித்தர...

களபத்தை சேர்ந்த இல்லத்தரசி ராணி:- பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திக். திக் என்ற மன நிலையிலேயே குடியிருப்பு வாசிகள் உள்ளோம். அச்சத்தின் காரணமாக பலர் இரவு நேரங்களில் வீட்டிற்கு வெளியே வெட்ட வெளியில் படுத்து தூங்கும் நிலை உள்ளது. குழந்தைகளை வீட்டில் விட்டு வேலைக்கு செல்ல பயமாக உள்ளது. 30 ஆண்டுகள் ஆன நிலையில் இங்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடுகளை சீரமைக்க வேண்டும்

கூலி தொழிலாளி நடராஜன்:- இங்கு குடியிருப்பவர்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறோம். எங்களது வருமானத்தில் வீட்டை புனரமைப்பு செய்ய முடியவில்லை. மழைக்காலம் வந்தாலே அச்சப்பட வேண்டிய நிலை உள்ளது. பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வரும் அரசு சிதிலமடைந்து உள்ள எங்கள் தொகுப்பு வீடுகளை உடனே சீரமைக்கவும், விரைவில் புதிய வீடுகளை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்