நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்
பருவம் தவறிய மழையினால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி அறுவடை பணி நடந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பெய்யும் பருவம் தவறிய மழையினால் பெரும் பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. பல இடங்களில் மழையினால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து விட்டது. சாயாத நெற்பயிர்களும் தொடர் மழையினால் பதராகும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் மழையினால் அறுவடை பணி பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே தமிழக அரசு உரிய அலுவலர்களை கொண்டு மழையினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உரிய ஆய்வு செய்திட வேண்டும். காப்பீடு திட்டத்திற்கான நெற்பயிர் மகசூல் சோதனை முடிந்து விட்டதால் இப்போது ஏற்பட்ட இழப்பிற்கு காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைக்க வாய்ப்பு குறைவு தான். மழையினால் நெல் மகசூல் இழப்பிற்கும், உளுந்து, பாசிப்பயறு, கடலை பயிர் பாதிப்பிற்கும் உரிய முழு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.