வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறப்பு
கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரியில முழுமையாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
திருக்காட்டுப்பள்ளி,
கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும் காவிரியில முழுமையாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.
காவிரி நீர்
தஞ்சை மாவட்டம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியிடுவது குறைந்த அளவில் உள்ளது. இதனால் கல்லணையில் இருந்து காவிரி வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதும் குறைவாகவே உள்ளது. இதனால் காவிரி பாசன பகுதியில் பயிர் செய்யப்பட்டுள்ள 5.50 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்கள் முழுமையாக விளைந்து அறுவடை செய்யமுடியுமா என்று கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் தினம் வினாடிக்கு 5ஆயிரம் கன அடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டது. கர்நாடகம் இந்த உத்தரவை மதித்து தண்ணீர் திறந்து விட்டாலும் அது கடைமடை வரை பயிர் செய்யப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு போதுமானதாக இருக்காது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
மேட்டூர்
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2844 கன அடியாக உள்ளது. தண்ணீர் வெளியேறும் அளவு 6500 கன அடி. நீர் இருப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 11.962 டி.எம்.சியாக குறைந்து உள்ளது. கல்லணையில் இருந்து 5- வது நாளாக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. வெண்ணாற்றில் நேற்று முன்தினம் 2402 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், நேற்று 3604 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. கல்லணை கால்வாயில் 1011 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்றுமுன்தினம் பூதலூரில் அதிகபட்சமாக 32.8 மில்லிமீட்டர் மழை பெய்தது. திருக்காட்டுப்பள்ளியில் 15.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. இந்த மழை இந்த பகுதியில் பயிரிட்ட குறுவை பயிர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். கர்நாடக அரசு கைவிட்டாலும் இயற்கை தங்களை கைவிடாது என்ற நம்பிக்கையோடு விவசாயிகள் விவசாய பணிகளை தொடர்ந்து தொய்வின்றி செய்து வருகின்றனர்.