அரசு பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்

ஊட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Update: 2022-10-10 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி அருகே அரசு உயர்நிலை பள்ளியில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மேலாண்மை குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அரசு பள்ளி

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து தீர்வு காணுமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

ஊட்டி அருகே ஊக்கர் அரசு உயர்நிலை பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயகுமாரி மற்றும் குழு உறுப்பினர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஊட்டி அடுத்த ஊக்கர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் 43 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ் மற்றும் கன்னட வழியில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

நியமிக்க வேண்டும்

இந்த பள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 2 கன்னட மொழி ஆசிரியர்கள் என 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள 7 பட்டதாரி ஆசிரியர்களில், தற்போது 5 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வி தரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் இல்லை. இதனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அரசு பஸ்

கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆலட்டி கிராம மக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஆலட்டி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் அருகே 150-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்ந்து வருகின்றனர். ஊட்டியில் இருந்து ஆலட்டி கிராமத்துக்கு கடந்த 20 ஆண்டுகளாக அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அரசு பஸ் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் நாங்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து தேனாடுகம்பைக்கு சென்று, அங்கிருந்து அரசு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி, மீண்டும் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், மேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராடா கொம்பு திக்கை கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்