சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிப்பா?கூடுதல் சூப்பிரண்டு விசாரணை

Update: 2023-08-01 20:27 GMT

சேலம்

சேலம் மத்திய சிறையில் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து கூடுதல் சூப்பிரண்டு வினோத் விசாரணை நடத்தினார்.

சாராய ஊறல்

சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகள் அறையில் அடிக்கடி சிறை வார்டர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது சில கைதிகளிடம் இருந்து தடை செய்யப்பட்ட செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கைதிகளை பார்ப்பதற்கு வரும் உறவினர்கள் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை அவர்களுக்கு கொடுக்கின்றனர். அப்படி கொடுக்கப்படும் பழங்களை சில கைதிகள் சாராய ஊறல் போட்டியிருப்பதாக சிறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சிறை வார்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிறையின் 7-வது பிளாக் அருகே மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் பாட்டிலுக்குள் சிறிய அளவிலான வாழை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களின் துண்டுகளும், அதன் தோல்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சூப்பிரண்டு விளக்கம்

இதுகுறித்து சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் கூறியதாவது:-

சிறையின் 7-வது பிளாக் பின்புறம் சுவரோரத்தில் குடிநீர் பாட்டிலுக்குள் சாப்பிட்டு மீதி உள்ள வாழை, ஆப்பிள் பழ சிறிய துண்டுகள் மற்றும் அதன் தோல்கள் அடைக்கப்பட்டு கிடந்தன. கைதிகளுக்கு ஆப்பிள், வாழை, மாதுளை பழங்கள் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆல்கஹால் தயாரிக்க பயன்படுத்தப்படும் பழ வகைகளான திராட்சை, பைனாப்பிள், கொய்யாப்பழம் ஆகியவை அனுமதிப்பது இல்லை. எனவே சிறையில் சாராய ஊறல் என்பது இல்லை. பாட்டில் கிடந்த இடத்தின் அருகே கூடுதலாக 4 கழிப்பறைகள் கட்டி வருகிறோம். அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் யாராவது பாட்டிலில் பழத்தோல்களை அடைத்தார்களா?, அல்லது கைதிகள் அடைத்தார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்