பக்தர்களை சோதனையிட கூடுதல் போலீசார் நியமனம்
பக்தர்களை சோதனையிட கூடுதல் போலீசார் நியமனம்
சுசீந்திரம்:
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். கார்த்திகை மாதத்தையொட்டி பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதையொட்டி கோவிலின் பாதுகாப்பு குறித்த தணிக்கை கூட்டம் நேற்று சுசீந்திரம் கோவில் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு புலனாய்வு ஆய்வாளர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், பொறியாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், பேரூராட்சி தலைவி அனுசியா மற்றும் சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்பு துறை, மின்சாரத்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், கோவிலில் உள்ள மின் இணைப்புகளை சரி செய்வது. கூடுதல் கண்காணிப்பு கேமரா அமைப்பது. கூட்ட நெரிசல் நேரத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவது. பக்தர்கள் கொண்டு வரும் உடமைகளை பரிசோதனை செய்வது. கோவில் வடக்கு வாசலில் கூடுதலாக நுழைவாயில் மெட்டல் டிடெக்டர் அமைப்பது. பக்தர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுப்பது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தை தொடர்ந்து கோவிலில் பக்தர்களின் உடமைகளை பரிசோதிக்க கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டனர். போலீசார் பக்தர்களை தீவிர பரிசோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் அனுமதித்தனர்.