வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு
கருப்பம்புலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கருப்பம்புலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்ட பணிகளை நாகை மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரிதிவிராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கருப்பம்புலம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ளஆவணங்கள், வரவு செலவுகணக்கு மற்றும் பஞ்சாயத்திற்கு வரி செலுத்தும் இனங்கள் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் ஊராட்சியில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் வரவு,செலவு கணக்குகளை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அருகில் இருந்த பள்ளியில் உள்ள கழிவறைகள் தூய்மையாக உள்ளதா எனவும், ரேஷன் கடையில் அரிசி தரமாக வழங்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார். மேலும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஆய்வு செய்து மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து வாங்க வேண்டும் என பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். கருப்பம்புலம் மேலக்காடு பழமுதிர்ச்சோலையில் வளர்க்கப்பட்டு வரும் 5 ஆயிரம் முருங்கை செடிகளை பார்வையிட்ட அவர், அங்கு தென்னங்கன்றுகளை நட்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு,பாஸ்கர், ஒன்றிய பொறியாளர் மணிமாறன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.