விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை, இருக்கை வசதி செய்து தரப்படும் லட்சுமணன் எம்.எல்.ஏ. உறுதி

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை, இருக்கை வசதி செய்து தரப்படும் என லட்சுமணன் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

Update: 2022-06-15 16:40 GMT

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் இடநெருக்கடியால் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், தேவையான இருக்கை வசதிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென பள்ளி ஆசிரியர்கள், விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணனிடம் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை அப்பள்ளியில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். அப்போது கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடவசதிகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார். முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை வழங்கி பேசுகையில், கொரோனா காலக்கட்டங்களில் மற்ற துறைகளை காட்டிலும் கல்வித்துறைதான் அதிகம் பாதிக்கப்பட்டது. தற்போது, மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்துள்ளீர்கள். இப்பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறை, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) காளிதாஸ், பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய், தி.மு.க. நகர செயலாளர் சக்கரை, நகரமன்ற கவுன்சிலர்கள் மகாலட்சுமி வைத்தியதான், மணவாளன், புருஷோத்தமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்