அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து வளர்ச்சித்திட்ட பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா ஆய்வு செய்தார்.
ஆய்வு
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மற்றும் அரியலூர் ஒன்றியம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், எரிசக்தித் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளருமான ரமேஷ் சந்த் மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முன்னிலை வகித்தார். இந்த ஆய்வில் ஆண்டிமடம் ஒன்றியம், விளந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.28 லட்சத்தில் விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் 2 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளையும், ரூ.1.51 லட்சத்தில் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ள கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து கட்டுமான பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், கட்டுமான பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து விளந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.12.3 லட்சத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டிட கட்டுமான பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து நடைபெறும் பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு கட்டிமுடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
சொட்டுநீர் பாசன திட்டம்
பின்னர், விளந்தை ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.6.1 லட்சத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிமெண்டு சாலை, ஆண்டிமடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.5.8 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட கதிரடிக்கும் களம் அமைத்தல் பணி உள்ளிட்டவைகளையும் பார்வையிட்டார். மேலும் ஆண்டிமடம் ஊராட்சி, பட்டணங்குறிச்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.5.22 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மகளிர் கழிவறை அமைத்தல் பணி, வாலாஜாநகரத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.4 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சொட்டுநீர் பாசன திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.