மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்-வருகிற 30-ந் தேதி கடைசி நாள்

Update: 2022-12-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். இதேபோல் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம், பார்க்கின்சன், நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்கள் தங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் அலுவலக வேலை நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்