நடிகை பாபிலோனாவின் தம்பி மர்ம சாவு
நடிகை பாபிலோனாவின் தம்பி பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
விருகம்பாக்கம்,
சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், புஷ்பா காலனியை சேர்ந்தவர் பிரபல சினிமா கவர்ச்சி நடிகை மாயா. இவருடைய மகன் விக்கி என்ற விக்னேஷ்குமார் (வயது 40). இவர், நடிகை பாபிலோனாவின் தம்பி ஆவார்.
விக்கி மீது போலீசை தாக்கியது உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் விருகம்பாக்கம் மற்றும் வடபழனி போலீஸ் நிலையங்களில் உள்ளது. அதே பகுதியில் உள்ள தசரதபுரம், 8-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விக்கி தனியாக வசித்து வந்தார்.
மர்ம சாவு
நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் விக்கி, வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. அவரது செல்போனில் தொடர்பு கொண்ட நண்பர், நீண்டநேரம் ஆகியும் செல்போனை எடுக்காததால் நேரில் வீட்டுக்கு வந்து பார்த்தார்.
அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
வீட்டின் படுக்கை அறையில் விக்கி, மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். போலீ சார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
விக்கி, கடந்த பல ஆண்டுகளாக அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். அவரது அறை முழுவதும் மது பாட்டில்கள் அதிக அளவில் இருந்தது. அதிக மதுபோதையில் நாக்கு வறண்டு இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே விக்கியின் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.