நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான்; சரத்குமார் பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான் என்று சரத்குமார் கூறினார்.

Update: 2023-06-18 21:31 GMT

'போர் தொழில்' படம்

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் கடந்த 9-ந்தேதி 'போர் தொழில்' என்ற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை விளம்பரப்படுத்த அந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர்கள் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி எல்.ஏ. சினிமாஸ் தியேட்டருக்கு நேற்று மாலை 6.30 மணிக்கு 'போர் தொழில்' திரைப்பட நடிகர்கள் சரத்குமார், அசோக் செல்வன், அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி ஆகியோர் வருகை தந்தனர். இதையடுத்து படக்குழுவினர் படம் முடிந்தவுடன் ரசிகர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

திருச்சியை மையமாக...

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த படம் ஒரு குற்ற பின்னணியில் எடுக்கப்பட்ட திரில்லர் படமாகும். இந்த படத்தின் இயக்குனர் இந்த படத்தை சிறந்த முறையில் இயக்கி உள்ளார். படம் வெளியான அனைத்து இடங்களிலும் ரசிகர்கள் இந்த படத்தை நல்ல முறையில் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

திருச்சியை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது. மேலும் எனது அடுத்த படம் 'அடங்காதே' திருச்சியை மையமாக வைத்துதான் எடுக்கப்பட்டது. அந்த படமும் வெற்றியடையும்.

நடிகர் விஜய்

திரையரங்கில் 20 நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து படம் வெளியாக உள்ளது. திரைப்படங்களை குறைந்தது 45 நாட்கள் இடைவெளியில் வெளியிட வேண்டும். இதன் மூலம் தியேட்டருக்கு பொதுமக்கள் வருவதை நாம் ஊக்குவிக்க தயாரிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடிகர் விஜய், பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். இது வரவேற்கத்தக்கது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவர் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சமத்துவ மக்கள் கட்சி திருச்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்