அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
பொதுமக்கள் அளிக்கப்படும் மனுக்கள் அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பொதுமக்கள் அளிக்கப்படும் மனுக்கள் அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பொதுமக்களிடம் மனு
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள கணந்தம்பூண்டி, ஆணாய்பிறந்தான், பண்டிதப்பட்டு ஊராட்சிகளில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த ஆட்சியில் நான் அமைச்சராக பொறுப்பேற்று கன்னியாகுமரியில் இருந்து தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பாக பல்வேறு திட்டப்பணிகளை செய்கின்ற அந்தத் துறையில் நான் ஈடுபட்டு இருக்கிறேன்.
என் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் மக்களின் குறைகளை கேட்க நேரடியாக சந்தித்து மனுக்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம்.
மாதத்திற்கு ஒரு நாள் என ஊராட்சிகளுக்கு சென்று மக்களை சந்தித்து மனுக்களை பெற வேண்டும் என்று செயல்பட்டு வருகிறேன்.
அதன் அடிப்படையில் இதுவரை 2 ஆயிரத்து 229 மனுக்கள் பொதுமக்களிடம் நேரடியாக பெற்று உள்ளோம். இந்த மனுக்களில் 50 சதவீதம் பரிசீலனை செய்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளே அதிகம் வழங்கி வருகின்றனர். பெறப்படும் மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணையை வீடு தேடி அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அளிக்கப்படும் மனுக்கள் அரசின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விதிமுறைக்கு எதிராக இருந்தால் எந்த நடவடிக்கையும் யாராலும் எடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகளச் சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல்,
மாநில கைப்பந்து சங்கத் துணைத்தலைவர் இரா.ஸ்ரீதரன், திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி, திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணிகலைமணி, தி.மு.க. மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பிரியாவிஜயரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.