இ-சேவை மையங்களில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை
இ-சேவை மையங்களில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
இ-சேவை மையங்களில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரித்துள்ளார்.
ஆய்வுக்கூட்டம்
மதுரை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித்சிங் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அலுவலக நடைமுறைகளை எளிமைப்படுத்திடவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்திடும் நோக்கில் அனைத்து அரசு அலுவலகங்களையும் கணினிமயமாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இ-சேவை மைய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்களின் பணிகள் எளிமையாக்கப்படும். காகித பயன்பாடு குறைந்து கோப்புகள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். அலுவலர்கள் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தங்களது பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 3,645 சென்னை தலைமைச் செயலக பணியாளர்களுக்கும், மாவட்ட அளவில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் மற்றும் இதர அரசு அலுவலகங்களை சேர்ந்த 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் சென்னை தலைமைச் செயலகம் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோப்புகளும், மாவட்ட அளவில் உள்ள அரசு அலுவலகங்கள மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோப்புகளும் கையாளப்பட்டுள்ளன.
கூடுதல் கட்டணம்
பாரத்நெட் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் அதிவேக இணைய சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் நான்கு பகுதிகளாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 8 மாத காலத்திற்குள் பணிகள் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மென்பொருள் நிறுவனங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் எல்காட் நிறுவனத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விரைவில் சோழிங்கநல்லூர், கோவை, திருச்சி ஆகிய 3 இடங்களில் எல்காட் நிறுவன கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட உள்ளன.
கடந்த ஆண்டு மட்டும் மதுரை மாவட்டம் மென்பொருள் ஏற்றுமதியில் 30 சதவீதம் வளர்ச்சி பெற்று மாநில அளவில் 4-ம் இடத்தில் உள்ளது. பொதுமக்களுக்கு இ-சேவை மையங்கள் மூலமாக தற்போது 250-க்கும் மேற்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை 300 சேவைகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்திற்கும் கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அதில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், உதவி கலெக்டர் சுரேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.