கொள்ளிடம் ஆற்றின் கரைகளை வலுப்படுத்த நடவடிக்கை
கொள்ளிடம் ஆற்றின் கரைகளை வலுப்படுத்த நடவடிக்கை
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை தேவைக்கேற்ப காவிரியின் கிளை ஆறுகளுக்கு திறந்து விடப்படும் தலைமை அணையாக விளங்குவது கல்லணை. உபரி நீரை வெளியேற்றும் கொள்ளிடம் ஆறு திருச்சி மாவட்டம் முக்கொம்பில் இருந்து பிரிந்து வருகிறது, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் திறந்து விடப்படும் தண்ணீரும் இதில் சேர்ந்து வெளியேறும் போது கடல் போல் காட்சி தரும். கொள்ளிடம் ஆற்றின் இரண்டு கரைகளும் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். மாறாக கல்லணைக்கு அருகாமையில் அமைந்துள்ள சுக்காம்பார் கிராமத்தில் உள்ள கொள்ளிடக்கரை நீண்ட தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டு உள்ளது. சுக்காம்பார் கிராம மக்கள் பயன் படுத்துவதற்காக அமைக்கப்பட்ட படித்துறை ஆற்றின் நீரோட்டத்தில் கரைகள் அரிக்கப்பட்டு காட்சி பொருளாக தனியாக நின்று கொண்டு உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் பெருகி வரும் வெள்ள நீரை திருப்பி விட அமைக்கப்பட்ட சிமெண்டு கான்கிரீட் சுவர்களில் சில உடைந்து காணப் படுகின்றன. சுக்காம்பார் கிராமத்தில் பலவீனமாக உள்ள கரையை உடனடியாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.