கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை

கொள்ளிடம் கரைகளை ரூ.47 கோடியில் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

Update: 2022-10-20 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படுகை கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, அளக்குடி, வடரங்கம், மாதிரவேளூர், தற்காஸ், பழையார் ஆகிய கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைநிலங்களும் நீரில் மூழ்கியுள்ளன. மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன.

அமைச்சர் மெய்யநாதன் பார்த்தார்

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார். பின்னர் அவர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இதனால், 6-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு 9 முகாம்களில் சுமார் 4 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கும் தீவனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

கரைகளை பலப்படுத்த நடவடிக்கை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்பேரில், நாதல்படுகை மற்றும் முதலைமேட்டு திட்டு கிராம பகுதிகளில் தலா ரூ.3 கோடி திட்ட மதிப்பீட்டில் புயல்-வெள்ள பாதுகாப்பு மையம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பலப்படுத்த ரூ.47 கோடியில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நெற்பயிருக்கு நிவாரணம்

கொள்ளிடம் கரையோர பகுதிகளில் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை மாவட்ட கலெக்டர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் மூலம் கணக்கீடு செய்து முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, எம். எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், கொள்ளிடம் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, வட்டார வளர்ச்சி அலுவலர்அருண்மொழி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்