விளை பொருட்களுக்கான செஸ் வரியை ரத்து செய்ய நடவடிக்கை

விவசாய விளை பொருட்களுக்கான செஸ் வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2022-05-31 19:26 GMT

விருதுநகர்

விவசாய விளை பொருட்களுக்கான செஸ் வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

வரி விதிப்பு

தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தினர் மாநிலத்தலைவர் நாராயணசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- விவசாயிகள் உற்பத்தி செய்யும் மக்காச்சோளம், பருத்தி அனைத்து வகை சோளம், உளுந்து, பாசிப்பயறு, அனைத்து சிறுதானிய பயிர்கள் உள்பட அனைத்துக்கும் இந்த ஆண்டு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பயிர்களுக்கு செஸ்வரி கிடையாது. இந்த செஸ் வரியானது விவசாயிகள் தலையில் மேலும் அதிக பாரத்தை சுமத்தக்கூடிய ஒரு மறைமுக திட்டமாகும். இதனால் விவசாயிகள் மக்காச்சோள பயிருக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.30 செலுத்த வேண்டிய சூழ்நிலையும், மறைமுகமாக விவசாயிகளுக்கு ரூ.50 இழப்பு ஏற்படும் சூழ்நிலை அமையும்.

மறு பரிசீலனை

விவசாயிகளிடம் வணிகர்கள் வாங்கும் பொழுது இவை அனைத்தும் விவசாயிகள் தலையிலேயே சுமத்தப்படும். ஏற்கனவே விவசாயம் பின்னோக்கி போய் கொண்டிருக்கும் போது இந்தச் செஸ் வரியானது கொரோனாவின் மூன்றாவது அலையாகவே கருதப்படும். விவசாயிகளை பெரிதும் பாதிக்கும்.

இந்த செஸ்வரியால் விவசாயிகளின் விளை பொருட்களின் விலையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதற்கு உண்டான காலகட்டம் அமைந்து விடும் என்பதால் விவசாயிகள் கடுமையான கடன் சுமையால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே இந்த செஸ்வரியை தமிழக அரசு மறு பரிசீலனை செய்து உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்