பழுதடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை

சேரம்பாடி-கோரஞ்சால் இடையே சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-01-06 18:45 GMT

பந்தலூர், 

சேரம்பாடி-கோரஞ்சால் இடையே சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குண்டும், குழியுமான சாலை

பந்தலூர் அருகே சேரம்பாடி விநாயகர் கோவில் பகுதியில் இருந்து சேரங்கோடு ஊராட்சி மன்ற அலுவலகம் வழியாக கோரஞ்சாலுக்கு சாலை செல்கிறது. சேரம்பாடியில் இருந்து சுங்கம் வழியாக சுல்தான்பத்தேரிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டால், அந்த இணைப்பு சாலை வழியாக வாகனங்கள் செல்கின்றன. இதற்கிடையே சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது.

இதனால் அந்த சாலையில் செல்லும் ஆம்புலன்ஸ்கள், தனியார் வாகனங்கள் பழுதடைந்து நடுவழியில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தினத்தந்தியில் செய்தி வெளியானது.

சீரமைக்க நடவடிக்கை

இதையடுத்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின்படி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், சேரங்கோடு ஊராட்சி தலைவர் லில்லி ஏலியாஸ், துணைத்தலைவர் சந்திரபோஸ், ஊராட்சி செயலாளர் சஜீத் ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சேரங்கோடு ஊராட்சி சார்பில், சாலையை சீரமைக்க ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

இதைதொடர்ந்து சேரம்பாடி பஜார் முதல் சேரங்கோடு ஊராட்சி அலுவலகம் வழியாக கோரஞ்சால் வரை பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் உள்ள கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டது. தொடர்ந்து புதியதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்க கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, கால்வாய் அமைக்கப்படும். சாலை சீரமைப்பு பணி தொடங்கி உள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்