தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை
வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
வால்பாறை,
வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.
பயிற்சி மையம்
தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வால்பாறை அட்டகட்டியில் உள்ள வனமேலாண்மை பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கீழ்பூணாச்சி மலைவாழ் மக்கள் உன்னிச்செடியில் இருந்து தயாரித்த கைவினை பொருட்களை பார்வையிட்டார். அவர்களது தனித்திறமையை ஊக்குவிக்கும் வகையில், 5 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி, சுற்றுச்சூழல் மேம்பாட்டு திட்டம் மூலம் 2 தையல் எந்திரங்களை வழங்கினார். மலைவாழ் மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
வால்பாறையில் கரடி, சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வரும் அனில்ஓரான், அய்யப்பன் இருவரை ஆஸ்பத்திரியில் சந்தித்து ஆறுதல் கூறினார். டாக்டர்களிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து ரூ.15 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இதைத்தொடர்ந்து சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் சிறுத்தை தொழிலாளியை தாக்கிய இடத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
டேன்டீ மேம்படுத்தப்படும்
அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட இடங்களையும் பார்வையிட்டார். வால்பாறை நகர் மக்களின் கால்நடைகள் எஸ்டேட் பகுதிக்குள் நுழையாமல் இருக்க, வனத்துறையினரும் எஸ்டேட் நிர்வாகங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன் பின்னர் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், மலைவாழ் மக்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். டேன்டீ நிர்வாகத்தை சரிசெய்ய சிறப்பு ஆய்வுக்குழுவை அனுப்பி, அதில் உள்ள குறைபாட்டை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் டேன்டீ மேம்படுத்தப்படும். வனத்துறையின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, சுற்றுலாத்துறையின் உதவியுடன் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
உதவித்தொகை
வனவிலங்குகள் தாக்குதலில் இருந்து தேயிலை தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இரவு, பகலாக பணிபுரிந்து வரும் வேட்டை தடுப்பு காவலர்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனைமலை புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை பாதுகாப்பாக கண்டு ரசிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை கள இயக்குனர் பார்க்வே தேஜா, உதவி வனப்பாதுகாவலர் செல்வம், வனச்சரகர்கள் மணிகண்டன், புகழேந்தி, வெங்கடேஷ், சுந்தரேவேல், நகராட்சி தலைவர் அழகு சுந்தரவள்ளி, துணை தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் சுதாகர் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் உடனிருந்தனர்.