கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை-கூடலூர் நகராட்சி கூட்டத்தில் ஆணையாளர் உறுதி
கூடலூரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி மன்ற கூட்டத்தில் ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் உறுதி அளித்தார்.
கூடலூர்
கூடலூரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என நகராட்சி மன்ற கூட்டத்தில் ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் உறுதி அளித்தார்.
நகராட்சி மன்ற கூட்டம்
கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அரங்கில் மன்ற கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர், துணைத் தலைவர் சிவராஜ், பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 109 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது. கவுன்சிலர் ஷகிலா, சத்தியசீலன் கூறும்போது, மன்றத்தின் ஒப்புதல் பெறாமல் தலைவருக்கு பெண் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆணையாளர் பிரான்சிஸ் சேவியர் கூறும்போது, தலைவருக்கு உதவியாளர் வைத்துக்கொள்ள சட்டத்தில் இடம் உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
கவுன்சிலர் சையத் அனூப்கான் :-
கூடலூர் நகருக்கான வளர்ச்சி திட்டங்கள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையாளர், இது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் லீலா வாசு, ராஜேந்திரன்:- கோடை காலம் தொடங்கி விட்டதால் வார்டுகளில் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையாளர்:- தடுப்பணைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.
கவுன்சிலர் வெண்ணிலா:- கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரே பணிக்காக இரண்டு ஒப்பந்ததாரர்கள் பெயரில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அப்போதைய மன்ற கூட்டத்தில் விளக்கம் கேட்ட போது தவறுதலாக இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது. தற்போது அதே தீர்மானத்தில் புதர்கள் வெட்டவும் டெண்டர் விடப்பட்டுள்ளதாகவும், குடிநீர் குழாய்கள் பழுது பார்ப்பதற்காகவும் டெண்டர் விடப்பட்டுள்ளதாக மற்ற ஒப்புதல் பெறாமல் தீர்மான புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
பாரபட்சம்
ஆணையாளர், உரிய அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும். தொடர்ந்து கவுன்சிலர் வெண்ணிலா கூறும்போது, என்னுடைய வார்டுகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பலமுறை எடுத்துக் கூறியும் தீர்மானத்தில் கொண்டு வருவதில்லை. இதனால் பாரபட்சம் காட்டப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக உறுப்பினரின் பணிகளுக்கு தீர்மானம் கொண்டு வரப்படும் என ஆணையாளர் உறுதியளித்தார்.
கவுன்சிலர் ராஜேந்திரன்:- போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க ஒர்க் ஷாப்புகளை நகருக்கு வெளியில் கொண்டு செல்ல நகராட்சி நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு விவாதங்கள் நடைபெற்றது.