மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க நடவடிக்கை

ஓவேலியில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரிவித்தார்.

Update: 2022-06-22 14:13 GMT

கூடலூர், 

ஓவேலியில் மனித-வனவிலங்கு மோதல்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் தெரிவித்தார்.

யானையை பிடிக்க கோரிக்கை

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறையில் ஆனந்தகுமார் என்பவரை கடந்த மாதம் காட்டு யானை தாக்கி கொன்றது. இதைத் தொடர்ந்து யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை பிடிக்கவில்லை. தொடர்ந்து கும்கி யானைகள் உதவியுடன் கண்காணிப்பு பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

கூடலூர் தாலுகா ஓவேலி வனம் கேரளாவின் நிலம்பூர் வடக்கு வனக்கோட்டம், நீலகிரி வடக்கு வனக்கோட்டம், கூடலூர் வனக்கோட்டம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைந்த பகுதி. ஓவேலி யானைகள் வழித்தடமாகவும், தென்னிந்தியாவின் யானைகளின் வேறுபாட்டை பராமரிப்பதற்கான முக்கிய பாதையாகவும் உள்ளது. பலா மரங்கள், வாழை மற்றும் பாக்கு தோட்டங்கள் அதிகமாக உள்ளதால் மனித வாழ்விடத்தை நோக்கி காட்டு யானைகள் வருகின்றன.

வாழ்விடம் பாதிப்பு

தற்போது காட்டு யானைகள் நீலம்பூரில் இருந்து ஓவேலி வழியாக முதுமலை நோக்கி நகர்கின்றது. ஓவேலியில் ஆக்கிரமிப்புகள், ஜென்மம் நில பிரச்சினை காரணமாக காடுகளின் பரப்பளவு குறைவாக உள்ளது. நீண்ட தூரம் நடந்து செல்லும் விலங்கு என்பதால் தேயிலை தோட்டங்கள் மற்றும் மனித வாழ்விடங்கள் வழியாக காட்டு யானைகள் நகரும்போது மனித-வனவிலங்கு மோதல்கள் தவிர்க்க முடியாததாகி வருகிறது.

குறிப்பாக பசுமையான மற்றும் இலையுதிர் காடுகளின் அழிப்பு மற்றும் நகர்மயமாதல், தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கம் ஆகியவை காரணமாக கடந்த 40 ஆண்டுகளில் யானைகளின் வாழ்விடங்கள் கடுமையாக பாதித்து உள்ளது. அதுமட்டுமின்றி யானைகளின் விருப்ப உணவாக பலாப்பழம், பயிர்கள், வாழை, தென்னை, ஏலக்காய் உள்ளது. இவை அனைத்தும் மனிதர்கள் வசிக்கும் இடங்கள், தோட்டத் தொழிலாளர் வீடுகளின் அருகில் மட்டுமே உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதியில் நுழைவதற்கு ஒரு முக்கிய காரணமாகவும், சாதகமான சூழல்களாகவும் உள்ளன.

டிரோன் மூலம் கண்காணிப்பு

இதைத் தவிர்க்கும் பொருட்டு ஓவேலி வனச்சரகத்தில் மனித-வனவிலங்குகளின் மோதல்களை தடுப்பதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட கூடுதல் களப்பணியாளர்கள் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 3 வாகனங்களில் அதிவிரைவு நடவடிக்கை குழு ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுதவிர காட்டு யானைகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க டிரோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காட்டு யானை வந்தால் முன்னெச்சரிக்கையாக ஒலி எழுப்பும் கருவிகள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஓவேலி வனச்சரகத்தில் மனித- வனவிலங்குகளின் மோதல்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வனத்துறை எடுத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்