வெள்ளநீர் கால்வாயில் அக்டோபரில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை; சபாநாயகர் மு.அப்பாவு தகவல்
“வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
"வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில் அக்டோபர் மாதம் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வெள்ளநீர் கால்வாய்
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் இருந்து வெள்ளக்காலங்களில் கடலில் கலக்கும் 13 மில்லியன் கனஅடி உபரிநீரை நாங்குநேரி, ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தாமிரபரணி ஆறு, நம்பியாறு மற்றும் கருமேனியாறு ஆகியவற்றை இணைத்து நதிநீர் இணைப்பு திட்டத்தை அதாவது வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது இந்த திட்டத்திற்கு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வந்தது. தற்போது முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை தொடர்ந்து இந்த திட்டப்பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிட்டார். ஏற்கனவே 3 நிலைகளில் பணிகள் முடிக்கப்பட்டு 4-வது நிலை பணிகள் நடந்து வருகிறது.
கிடப்பில் கிடக்கும் பணி
இதில் பொன்னாக்குடி அருகே நெல்லை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நதிநீர் இணைப்பு திட்ட கால்வாயின் குறுக்கே மேல்மட்ட பாலம் 6 வழிச்சாலைக்கு திட்டமிடப்பட்டு ரூ.17 கோடியே 9 லட்சம் நிதி ஒதுக்கி பாலப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்வையிட்ட சபாநாயகர் அப்பாவு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அதன்பிறகு அந்த பணிகள் மும்முரமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பாலம் கட்டும் பணி நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர். வெள்ளநீர் கால்வாய் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட்டு தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்த ராதாபுரம், திசையன்விளை பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த பாலப்பணி குறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில், "பொன்னாக்குடியில் பாலம் கட்டும் பணிக்கு வெடிவைத்து பாறைகளை தகர்க்க வேண்டும். இதற்காக வெடி வைப்பதற்காக பாளையங்கோட்டை தாசில்தாருக்கு, தேசிய நெடுஞ்சாலை துறையினர் மனு கொடுத்துள்ளனர். தாசில்தார் அந்த மனுவை விசாரணை நடத்தி கனிமவளத்துறைக்கு அனுப்பி, அவர்கள் அனுமதி கொடுத்தால் தான் வெடி வைத்து பாறைகளை தகர்க்க முடியும். தற்போது இந்த பகுதியில் கல்குவாரி விபத்து ஏற்பட்டதால் பாறைகளுக்கு வெடி வைக்க கனிமவளத்துறை அனுமதி கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. உடனே அனுமதி கிடைத்தாலும், பணிகள் முடிய ஒரு வருடம் ஆகும். இதேபோல் செங்குளம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலம் பணியும் தாமதமாகவே நடக்கிறது.
இந்த பணிகளை துரிதப்படுத்தி விரைவில் வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை முடித்து இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை காலங்களில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதில் இருந்து இங்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்" என்றனர்.
சபாநாயகர் அப்பாவு
இதுகுறித்து சபாநாயகர் அப்பாவுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் ெமாத்த மதிப்பீடு ரூ.369 கோடி ஆகும். கடந்த 2009-ம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, 2011-ம் ஆண்டுக்குள் ரூ.215 கோடி மதிப்பீட்டில் பாதி பணிகள் முடிவடைந்தது. தற்போது இந்த பணிகளை விரைவுப்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பொன்னாக்குடியில் ரூ.17 கோடியே 9 லட்சம் மதிப்பில் பாலம் கட்டும் பணிக்கு உரிய பணத்தை அரசு கொடுத்து விட்டது. அந்த பணியை தொடங்கிய ஒப்பந்ததாரர் அங்குள்ள பாறைகளை வெடிவைத்து தகர்த்து தான் பாலம் அமைக்க முடியும் என்பதால் ஏற்கனவே கால்வாய் வெட்டிய பகுதியில் மாற்றுப்பாதை அமைக்க ஒப்பந்ததாரர் முடிவு செய்துள்ளார். 3 ஆயிரத்து 455 கன அடி தண்ணீரை இந்த கால்வாயில் திருப்பி விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் விட நடவடிக்கை
ஆனால் அந்த இடத்தில் 50 கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய அளவிற்கு குழாய் போட்டு பணியை மேற்கொள்ள அந்த ஒப்பந்ததாரர் முயற்சி செய்தார். இதையடுத்து, நான் அவரை நீர்வளத்துறை அமைச்சரிடம் அழைத்துச்சென்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்லக்கூடிய அளவிற்கு குழாய் போட்டு மாற்றுப்பாதை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். அமைச்சரும் அதையே கூறியுள்ளார். ஆகவே குழாய் போட்டு விரைவில் மாற்றுப்பாதை அமைத்து இந்த பாலம் கட்டும் பணி தொடங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாலம் கட்டும் பணி சில மாதங்களிலேயே முடிவடைந்துவிடும்.
இதேபோல் செங்குளம் ரெயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கும் இடத்தில் இரட்டை ெரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ஒரு வழிப்பாதையில் பணிகள் முடிக்கப்பட்டு ரெயில் செல்வதற்கு தயார் நிலையில் உள்ளது. இன்னும் 10 நாட்களில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் வந்து ஆய்வு செய்து புதிய பாதையில் ரெயில் செல்ல அனுமதி வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய பாதையில் ரெயில் சென்ற பின் பழைய பாதையில் உள்ள பணியை 2 மாதத்தில் முடித்து தருவதாக அந்த பணி செய்கின்ற ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் அதில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக முயற்சி எடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.