தென்னை விவசாயிகளுக்கு வளர்ச்சி வாரிய நிதி உதவி கிடைக்க நடவடிக்கை
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய நிதி உதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:-
விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி விஜய முருகன்:- கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியம் மூலமாக தான் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்புள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கும் நிதி உதவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் விவசாயிகள் நடந்து செல்லும் பாதை அடைக்கப்பட்டு விட்டதால் விவசாயிகளுக்கும், விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த பாதையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பூமிதான திட்டத்தில் நிலங்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயிர்க்கடன்
முருகன்:- கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் கேட்டால் விதிமுறைகளை மீறி நகை அல்லது ஜாமீன் கொடுக்க வலியுறுத்தும் நிலை உள்ளதால் இது தவிர்க்க வேண்டும்.
விவசாய சங்க நிர்வாகி ராமச்சந்திர ராஜா:- தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 2 கோடி வரை நிலுவைத்தொகை கிடைப்பதற்கு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து ெகாண்டனர்.