ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு பெற நடவடிக்கை -ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-11-25 18:35 GMT

சென்னை,

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றால், அதற்கு காரணம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் தான். இதன் மூலம் தமிழகத்தின் கலாசார மரபுரிமையை நிலைநாட்டிய பெருமை அ.தி.மு.க.வுக்கு உண்டு. இதற்கான சட்ட முன்வடிவை முதல்-அமைச்சர் என்ற முறையில் தமிழக சட்டப்பேரவையில் நான் முன்மொழிந்ததையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்டம் நான் முதல்-அமைச்சராக இருந்தபோது இயற்றப்பட்டதையும் வாழ்நாளில் கிடைத்த வரப்பிரசாதமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பினை வழங்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி.

இந்த சட்டத்தை எதிர்த்து, பிராணிகள் நல வாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வு முன்வு கடந்த 23-ந் தேதியன்று வந்தபோது, 2017-ம் ஆண்டைய தமிழ்நாடு அரசின் சட்டத்துக்கு எதிராக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது என்றும், தமிழக அரசின் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் இயற்றிய தமிழக சட்டசபையின் அதிகாரம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்த உள்ளோம் என்று தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மக்களின் எதிர்பார்ப்பு

தமிழகத்தின் உரிமையும், பாரம்பரியமும், கலாசாரமும், தமிழக மக்களின் உணர்வும் அடங்கியுள்ள ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடைபெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு. இந்த வழக்கின் முடிவு தமிழகத்துக்கு சாதகமாக அமையவேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே நிலவுகிறது. எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தனிக்கவனம் செலுத்தி, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டத்தை நிலைநிறுத்தும் வகையில், தலைசிறந்த வக்கீல்கள் மூலம் வலுவான வாதங்களை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்து வைக்கவேண்டும்.

மேலும், மத்திய அரசு தலைமை வக்கீல் மூலம் தமிழ்நாட்டுக்கு சாதகமான, வலுவான வாதங்களை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துரைக்கும் வகையில் மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் ஆக்கப்பூர்வமான, துரிதமான, உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்