கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை; டி.ஜி.பி. சைலேந்திர பாபு பேட்டி
“கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
"கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.
ஆய்வு கூட்டம்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி. பி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கந்துவட்டி, கஞ்சா விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நெல்லை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
சொத்துக்களை முடக்க...
பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் 238 புகார்கள் பெறப்பட்டு, 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கந்துவட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப்படுவது போல் இதனை பின்பற்றி தமிழகம் முழுவதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.
கஞ்சா
தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முழுவதும் தடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வரும் தகவலை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாநகர பகுதியில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,000 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த 87 பேர் கைது செய்யப்பட்டு, 61 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனை செய்ததாக 183 பேர் கைது செய்யப்பட்டு, 767 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 6 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. கந்து வட்டி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), ஹரிகிரன் பிரசாத் (கன்னியாகுமரி), கிருஷ்ணராஜ் (தென்காசி), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் அனிதா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.