திட்ட அறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கீடு: கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை; மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தகவல்

கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-10-28 18:40 GMT

நாகர்கோவில், 

கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி மீனவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன், உதவி இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு அதிகாரிகள் அந்தந்த துறைகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதில்களை வாசித்தனர். பின்னர் கூட்டத்தில் மீனவர்கள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகள் பேசுகையில் கூறியதாவது:-

விரைவுபடுத்த வேண்டும்

கடற்கரை கிராமங்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். வாணியக்குடி மீனவ கிராமத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம், குறும்பனை மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்.

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கடலோர கிராமங்களில் உள்ளாட்சி வார்டுகளை ஒழுங்குப்படுத்தி வாக்காளர் எண்ணிக்கையை முறைப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான சுமார் 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கப்பட வேண்டும்.

கருத்துக்கேட்பு கூட்டம்

குளச்சல் முதல் மண்டைக்காடு புதூர் வரை உள்ள ஏ.வி.எம். கால்வாயை தூர்வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஏற்கனவே அளித்த பதில்களையே அதிகாரிகள் தந்து கொண்டிருக்கிறார்கள். பெரியகாடு மீனவர் கிராமத்தில் போடப்பட்டுள்ள தூண்டில் வளைவை சீரமைத்து 100 மீட்டர் நீளத்திற்கு நீட்டித்து தர வேண்டும். பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலம் கடற்கரை பகுதிகளை மிடாலம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும். மணவாளக்குறிச்சி அரியவகை மணல் ஆலை மூலம் 1,144 எக்டேர் பரப்பில் மணல் எடுப்பது தொடர்பாக மக்களின் கருத்துக் கேட்பு கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். கடற்கரை கிராமங்களில் புற்றுநோய் அதிகரிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை மூலம் வல்லுனர் ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி உலக மீனவர் தினமாகும். உலக மீனவர் தினவிழாவை சிறப்பாக நடத்த அன்றைய தினம் குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் பேசினர்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் அரவிந்த் மற்றும் அதிகாரிகள் பேசுகையில் கூறியதாவது:-

கடற்கரை கிராம சாலை

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி ஒரு மாத காலத்துக்குள் முடிக்கப்படும். வாணியக்குடி மீனவ கிராமத்தில் சிறிய மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணி 6 மாத காலத்துக்குள் தொடங்கப்படும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க பி.எம்.ஜே.வி.கே. திட்டத்தின் கீழ் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஏ.வி.எம். கால்வாயை தூர்வாரி சீரமைக்கும் பணி சிறப்பு கவனத்துடன் மேற்கொள்ளப்படும். மணவாளக்குறிச்சி மணல் ஆலை மூலம் 1144 எக்டேர் பரப்பில் மணல் எடுப்பது தொடர்பாக மக்களின் கருத்து கேட்பு கட்டாயம் நடத்தப்படும்.

ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 47 கடற்கரை கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சாலை மற்றும் பாலங்கள் அமைத்திடும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 75 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஏற்கனவே இரண்டு மூன்று முறை போடப்பட்டு இன்னும் ஒப்பந்த முடிவு செய்யப்படாமல் உள்ளது. விரைவில் இந்த ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். உலக மீனவர் தினத்துக்கு தலைமை அலுவலகத்திலிருந்து உரிய நிதியைப் பெற்று சிறப்பாக கொண்டாடிட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த விழாவுக்கு மீன்வளத்துறை அமைச்சரை அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கூட்டத்தில் மீனவ சங்க பிரதிநிதிகள் பெர்லின், அருட்பணியாளர் சர்ச்சில், அலெக்சாண்டர், ஜான்அலோசியஸ், மரிய ரூபன்குமார், விமல்ராஜ், பள்ளம் பஞ்சாயத்து தலைவர் அந்தோணி, கேசவன்புத்தன்துறை பஞ்சாயத்து தலைவர் கெபின்ஷா, தூத்தூர் பஞ்சாயத்து தலைவர் லீலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்